வரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும் பெயரிடப்படாத படம் இன்னும் மூன்று மாதங்கள் தள்ளி ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸாக வாய்ப்புள்ளதாக படக்குழு வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அஜீத்தின் விருப்பமும் அதுதான் என்கிறார்கள் அவர்கள்.

போனி கபூர் தயாரிப்பில் அஜீத் கமிட் ஆகியிருக்கும் அடுத்த இரு படங்களில் பிங்க் படத்தின் ரீமேக்கான பெயர் சூட்டப்படாத படம் அஜீத்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ரகசியமாகத் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று கதாநாயகிகள் மற்ற நடிகர்கள் காட்சிகள் மட்டும்படமாக்கப்பட்டு வரும் நிலையில் அஜீத் இரு தினங்களுக்கு முன்புதான் படப்பிடிப்புக்கு ஆஜராகியுள்ளார்.

படப்பிடிப்பில் முதல் நாளே இயக்குநர் விநோத்தை அழைத்த அஜீத் ‘என் பிறந்த நாளை மனதில் வைத்துக்கொண்டு அவசர அவசரமாக படத்தை சுருட்டவேண்டாம். விஸ்வாசத்தின் மாபெரும் வெற்றியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது மிக மிக முக்கியம். எனவே நிதானமாக படப்பிடிப்பை நடத்துங்கள் என்று அவரது படபடப்பைக் குறைத்திருக்கிறாராம். இதையொட்டி படத்தில் அஜீத்தின் காட்சிகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.