பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து கன்னட திரைப்பட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையின் முடிவில் தனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருப்பதாக தெரியவந்தது. ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பெண் போலீசார் உட்பட 7 பேர் கொண்ட குழு அதிரடி சோதனையில் இறங்கியது. இதையடுத்து நடிகை ராகினி திரிவேதியை பெங்களூர் போலீசார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவர் கொடுத்த தகவலின் பெயரில், தற்போது நடிகர் விவேக் ஓபராய் வீட்டிலும் அவரது உறவினர் வீட்டிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி அளித்த தகவலின்பேரில் மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் விவேக் ஓபராயின் மைத்துனர் ஒருவருக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட உடனே அவர் தலை மறைவு ஆகிவிட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

விவேக் ஓபராய், தல அஜித்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான... 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.