Texla Movie shooting Behins : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில், மலையாள நடிகர் சூர்யாஜ் வெஞ்சாரமூடு உடன் ஜெய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. கண்ணன் ரவி குரூப்பின் கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. இந்த படத்தில் ஜெய் மற்றும் பிரபல மலையாள நடிகர் சூர்யாஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த படத்திற்கு, தீபக் ரவி இணை தயாரிப்பாளராக இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஆனந்த் ராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் போன்றோரும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதுகுறித்து தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுகிறேன். என் பயணத்தின் தொடக்கத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது ஒரு வரம். சிறந்த கலைஞரும், என் நண்பருமான சூர்யாஜ் வெஞ்சாரமூடு உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இது ஒரு நீண்ட, அர்த்தமுள்ள பயணத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
டெக்ஸ்லா பட ஷூட்டிங் ஆரம்பம்
நடிகர் சூர்யாஜ் வெஞ்சாரமூடு, "இந்த படத்தின் கதையும், நான் நடிக்கும் கதாபாத்திரமும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த ப்ராஜெக்ட்டில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்திருந்தார்.
பழைய நினைவுகளைத் தூண்டும் பல தருணங்கள் நிறைந்த ஒரு ஃபீல் குட் டிராமாவாக இந்தப் படம் இருக்கும் என டைட்டில் டீசர் உணர்த்துகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும். இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ஐந்தாவது படமாகும். இதற்கு முன் தனுஷ் நடித்த '3', கௌதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை', 'சினிமா வீரன்' என்ற டாக்குமெண்டரி, மற்றும் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த 'லால் சலாம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் மியூசிக் உரிமையை யு1 ரெக்கார்ட்ஸ் வாங்கியுள்ளது. சமீபத்தில் சூப்பர் ஹிட்டான ஜீவா - நிதீஷ் சஹதேவ் படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை தயாரித்ததும் கண்ணன் ரவிதான். இது தவிர, 'ராவண கோட்டம்' படத்தையும் தயாரித்துள்ளார். இவருடைய தயாரிப்பில் 'பேங் பேங்', 'ஜீவா 46', போஸ் வெங்கட் இயக்கும் படம், கௌதம் கார்த்திக் படம், உமாபதி ராமையா படம் என பல படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.


