தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நள்ளிரவில் சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் நேரில் சென்று உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.
Aishwarya Rajesh social service : குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், சமூகப் பிரச்சினைகளைக் கவனித்து, பலமுறை குரல் கொடுப்பவராகவும் ஐஸ்வர்யா இருக்கிறார். தற்போது, அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. மழையில் தெருவோரம் உறங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு போர்வை வழங்கி உதவி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். உறங்குபவர்களை எழுப்பாமல், அவர்கள் மீது போர்வையைப் போர்த்தும் ஐஸ்வர்யாவின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகை பகிர்ந்த இந்த வீடியோ சில நிமிடங்களிலேயே வைரலானது.
ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த உதவி
இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டுள்ள பதிவில், "நான் தெரு ஓரம் வசிக்கும் மக்களுடன் பேசினேன். ஆதரவற்ற மக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்... அந்தக் காட்சி மனதை உடைப்பதாக இருந்தது. நூறு ரூபாய் மதிப்புள்ள ஒரு போர்வையை நம்மால் வாங்க முடியும். இதற்கு இரண்டாவது சிந்தனைக்கே இடமில்லை. வானத்தையே கூரையாகக் கொண்டு, குளிரில் நடுங்கி, கொசுக்கடியால் அவதிப்படும் அந்த மக்களுக்கு நாம் அனைவரும் சேர்ந்து அரவணைப்பு கொடுப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அக்டோபர் மாதம் 'மொய் விருது' என்ற தன்னார்வ அமைப்புடன் மீண்டும் சந்திப்போம் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கம்பளி அன்பின் சின்னம் என்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி உள்ளார். தேவைப்படுபவர்களுக்கு இதுபோல போர்வை வாங்கி வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கடைசியாக தெலுங்கில் வெளியான 'சங்கராந்திக்கு வஸ்துன்னம்' என்ற படத்தில் நடித்திருந்தார். 'காக்கா முட்டை', 'கனா', 'ரம்மி', 'வட சென்னை' போன்ற படங்களில் அவரது நடிப்புக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தன. தற்போது அர்ஜுன் உடன் ‘தீயவர் குலைகள் நடுங்க’ என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
