சினிமா நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த, தமிழ்சினிமாவின் பொக்கிஷங்களுல் ஒருவரான  இயக்குநர் சேரன் மீண்டும் படம் இயக்க வருகிறார்.

இத்தகவலை சற்றுமுன்னர் தனது முகநூல் பக்கத்தில் சேரனே அதிகாரபூர்வமாக அறித்தார். ’மீண்டும் படம் இயக்க வருகிறேன். வரும் 12ம் தேதி படம் குறித்த முதல் பார்வையை வெளியிடுகிறேன்’ என்பதோடு அத்தகவலை சேரன் முடித்துக்கொண்டதை ஒட்டி வெளியான பின்னூட்டங்களில் பலரும் ‘சார் நீங்க நல்ல டைரக்டர். ஆனா ஹீரோவா நடிச்சி ரிஸ்க் எடுக்கவேண்டாம்’ என்பது மாதிரியான வேண்டுகோளையே அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் சேரன் வெறுமனே படத்தை இயக்கப்போகிறாரா அல்லது ஹீரோவாக நடித்து இயக்கப்போகிறாரா என்பதை அவர் அறிவிக்கும்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

‘பாரதி கண்ணம்மா’,’பொற்காலம்’ படங்களின் வழியாக தனி முத்திரை பதித்த சேரன், தான் ஹீரோவாக நடித்த ‘ஆட்டோ கிராஃப்’ படத்தில்தான் தன் உச்சம் தொட்டார்.  2005 ல் ராஜ்கிரணை கதைநாயகனாக வைத்து இவர் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படத்துக்குப் பின்னர் மெல்ல சறுக்கத் துவங்கினார். அடுத்து ஹீரோவாக நடித்து இயக்கிய ‘மாயக்கண்ணாடி’ சேரனை படுகுழிக்குள் தள்ளவே, மிஷ்கின், கரு.பழனியப்பன் போன்ற இயக்குநர்களின் படங்களில் ஹீரோவாக நடித்தார்.

சொந்தப் பட தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், சிறு உடல்நலக் கோளாறு காரணமாகவும், கடந்த 4 ஆண்டுகளாகவே சினிமாவை விட்டு ரெண்டு கி.மீட்டர் தள்ளியே வாழ்ந்து வந்தார் சேரன். இனி நிகழப்போவது அவருக்கு மறுஜென்மம்தான் என்று சொல்லவேண்டும்.