ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படத்தை லைகா நிறுவனம் திரையிட உள்ளது. அதற்கான புரோமோஷன் வேலைகளும் படு ஜோராக நடைபெற்று வருகின்றன. 

"தர்பார்" படத்தை வரவேற்கும் விதமாக ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்க ஆரம்பித்துவிட்டனர். சிலர் "தர்பார்" படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் "தர்பார்" படத்தை வெளியிடுவதற்காக புதிதாக கட்டப்பட்ட பல தியேட்டர்கள் நாளை திறக்கப்படுகின்றன. சூப்பர் ஸ்டார் படத்தை ரிலீஸ் செய்தால் கல்லா கட்டலாம் என்பதற்காக மட்டும் இல்லை, முதல் முதலில் தலைவர் படத்தை திரையிட்டால் தனி மாஸ் என்பதற்காகவும் பல தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.

தூத்துக்குடி பெரிசன் பிளாசா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியேட்டர் "தர்பார்" படத்தை முன்னிட்டு நாளை திறக்கப்படுவதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். 

இதேபோல் பெரம்பலூரில் உள்ள ராம் அண்ட் கிருஷ்ணா சினிமாஸ் திரையரங்கின் பழைய தியேட்டர் சீரமைக்கப்பட்டு,  409 இருக்கைகளுடன் சும்மா ஜொலிக்கிறது. அதையும் "தர்பார்" பட ரிலீஸை முன்னிட்டு நாளையே திறக்க உள்ளனர். 

24 வருடங்களுக்கு முன்பு பாட்ஷா படத்திற்காக புதிய தியேட்டர்கள் திறக்கப்பட்டதை நினைவு கூறும் ரஜினி ரசிகர்கள், இந்த தகவல்களை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.