மன்னன் ராஜராஜசோழன் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய கருத்துகள் தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாகிவரும் நிலையில் அவர் பேசிய கருத்துக்கள் தவறானவை அல்ல. இதே கருத்தை முன்னாள் முதல்வர் ஆதரித்து அணிந்துரையும் எழுதியுள்ளார் என்று  அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 5ஆம் தேதி திருப்பனந்தாளில் நடைபெற்ற நீலப்புலிகள் அமைப்பின் தலைவர் டி.எம்.உமர் பாரூக் நினைவு தினப் பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் காலத்தில்தான் பட்டியலின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், ரஞ்சித் மீது இரு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரஞ்சித் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ரஞ்சித்துக்கு ஆதரவாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரிலுள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று (ஜூன் 17) வழக்கறிஞர் உதயபானு தலைமையில் சென்ற தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இம்மனுவை அளித்தனர்.மனுவை அளித்தபின்  செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், “ரஞ்சித் குடும்பத்தினரின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வன்கொடுமை நடத்தியிருக்கிறார் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இதுபோன்று செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

மேலும்  “தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைத்தான் ரஞ்சித் பேசியுள்ளார். அந்தப் புத்தகத்துக்கான அணிந்துரையையும்  மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். ராஜராஜ சோழன் என்கிற தனிப்பட்டவரை ரஞ்சித் விமர்சிக்கவில்லை. அவரது ஆட்சியைத்தான் விமர்சிக்கிறார். அது தவறாக இருக்க முடியாது” என்றும் விளக்கம் அளித்தனர்.