Aditi Shankar: கதை தான் முக்கியம் ஹீரோ இல்லை! விஜய் பட வில்லனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்!
முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நடிகை அதிதி ஷங்கர், கைதி, மாஸ்டர், போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தன்னுடைய முதல் படத்திலேயே ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது முரளியின் மகன் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கைதி, மாஸ்டர், போன்ற படங்களில் வில்லனாக நடித்து... பின்னர் அநீதி, ரசவாதி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரவாரமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதிதி தொடர்ந்து கதையை மட்டுமே ஹீரோவாக கருதி ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறாரே தவிர, கதாநாயகனை பார்த்து அல்ல என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார்.