வருமான வரித்துறைக்கு 4 கோடி நிலுவைத் தொகையை நடிகர் விஷால் செலுத்தவேண்டும் என்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று நண்பகல் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது தொடரப்பட்ட 5 வழக்குகள் மீதான இந்த தீர்ப்பால் விஷால் தரப்பு அதிர்ந்து போயுள்ளது.

விஷால் நடத்தி வந்த விஷால் ஃபிலிம் ஃபேக்டரி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்ததை முறையாக வருமான வரித் துறைக்கு செலுத்தாதது தொடர்பாக தொடரப்பட்ட 5 வழக்குகளில் விசாரிப்பதற்கு நடிகர் விஷால் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் .இது குறித்து நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபோக கடந்த 2016-ம் ஆண்டு, சேவை வரித்துறையினர் நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சோதனை செய்தபோது அவர் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.அப்பொழுது நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் தந்த விஷாலை உங்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழிலேயே பதில் சொல்லலாம் என நீதிபதி மலர்மதி தெரிவித்தார்.பின்னர் 5 வழக்குகளின் நகல்களில் 10 கையெழுத்துக்களை போட்டுவிட்டு காத்திருக்கும்படி விஷாலை வெளியே அனுப்பினார்.

பிறகு 10 மணிக்கு வந்த விஷாலை இரண்டே முக்கால் மணி நேரம் நீதிமன்ற அறையில் நிற்கவைத்துவிட்டு பிறகு 12.45 மணி அளவில் விஷாலை விசாரித்த நீதிபதி, ”தற்போது உள்ள நான்கு கோடி வருமான வரியை செலுத்தி விட்டு வழக்கை முடித்து விடுகிறீர்களா....? அல்லது தொடர்ந்து வழக்கை நடத்துகிறார்களா? என்பது குறித்து உங்களின் ஆடிட்டரிடமும் வழக்கறிஞரிடமும் கேட்டுவிட்டு வரும் 12ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

தயாரிப்பாளர் சங்க விவகாரம், நடிகர் சங்க மோதல்கள், சொந்த வாழ்க்கைச் சிக்கல் என்று தொடர்ந்து சங்கடங்களையே சமீபகாலமாக விஷால் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.