‘கடந்த இரண்டு வருடங்களாக ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்களும் ஹீரோக்களின் படங்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான வசூலைக் குவிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் ஹீரோயின்களுக்கு நல்ல சம்பளம் தரும் மனசு மட்டும் தயாரிப்பாளர்களுக்கு வரவே இல்லை’ என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழில் மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி அடுத்து தமிழ்ப் படங்கள் எதிலும் நடிக்கமுடியாத அளவுக்கு தெலுங்குப் படங்களில் பயங்கர பிசியான பூஜா ஹெக்டே ’ஒக லைலா கோஷம்’,’முகுந்தா’,’ரங்கஸ்தலம்’,’சாக்‌ஷியம்’ போன்ற தெலுங்குப் படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட்டடித்தார். நடுவில் ‘மொஹஞ்சோ தரோ’ என்ற ஹிந்திப்படத்தில் நடித்த அவர் மீண்டும் அக்‌ஷய் குமாருடன் ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இந்திப் படங்களின் ட்ரெண்ட் குறித்துப் பேசிய அவர்,’தற்போதெல்லாம் ஹீரோயின் சப்ஜெக்டுகள் கொண்ட படங்கள் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை புரிகின்றன. ’ராஷி’, ‘வீரா தி வெட்டிங்’,’மணிகர்னிகா’ போன்ற படங்கள் வசூலில் 100 கோடியைத் தாண்டி சாதனை புரிந்துள்ளன. இனி வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும். பெண்களும் ஆண்களுக்கு இணையாக சினிமாவை ஆளத்துவங்குவார்கள்.

ஆனால் சம்பளப் பிரச்சினையில் பெண்களை இந்த இண்டஸ்ட்ரி இன்னும் அதளபாதாளத்திலேயே வைத்திருக்கிறது. ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியைக்கூட ஹீரோயின்களுக்குத் தரும் மனசு தயாரிப்பாளர்களுக்கு வர மறுக்கிறது. இது மாறவேண்டும். இந்த மாற்றம் நியாயமாக நிகழவேண்டுமானால் அதிக அளவில் பெண்களும் தயாரிப்பாளர்களாக முன்வரவேண்டும்’ என்கிறார் பூஜா ஹெக்டே.