நாம் தமிழர் கட்சியை பற்றியும், அதன் தலைவர் சீமான் பற்றியும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஜயலட்சுமி இந்த முறை தன்னை அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் மிரட்டி வருவதாக கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் நடிகை விஜயலட்சுமி. அப்போது இரு காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தனக்கு கொலை மிரட்டல்  விட்டு வருவதாகவும், அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக, பாஜகவைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் என தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுவதோடு, அவர்கள்ஆபாசமான வார்த்தைகளால் தன்னை விமர்சனம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தகுந்த ஆடியோ ஆதாரத்துடன் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளதாக தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாகவும், இதன் காரணமாகவே பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது தன்னுடைய செல்போனை பாஜகவின் கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராமன் எடுத்துச் செல்ல முயற்சித்தார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

அரசியலில் ஈடுபடும் ஆர்வம் உள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இவர், பாஜகவில் இணைய நினைத்ததாகவும் ஆனால் சீமான் அந்த கட்சியில் இணைய உள்ளதாக கேள்வி பட்டதால் தன்னுடைய முடிவை மாற்றி கொண்டதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என கூறி, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் கட்சியில் இணைந்து வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என கூறியுள்ளார் விஜயலட்சுமி.