விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் 7 வது சீஸன் முடிந்து பாடகர் மூக்குத்தி முருகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,’அந்நிகழ்ச்சியில் போங்கு ஆட்டம் ஆடுகிறார்கள்’என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரபல நடிகையும் கமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுல் ஒருவருமான ஸ்ரீபிரியா.

சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு புண்யா, விக்ரம், கௌதம், ஷாம் விஷால், முருகன் ஆகியோர் தேர்வாகி  இருந்தனர். இப்போட்டியின் கிராண்ட் ஃபினாலே கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை   நேரலை செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு  அனிருத்  இசையில் பாடும்  வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று மக்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். இறுதியில் மூக்குத்தி முருகன் சூப்பர் சிங்கர் சீசன் 7 ன் பட்டத்தைத் தட்டி சென்றார்.  அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடும் வழங்கப்பட்டது.இரண்டாவது இடத்தை  விக்ரம்  வென்ற நிலையில் அவருக்கு 25 லட்ச ருபாய் மதிப்பிலான வைர நகைகள் கொடுக்கப்பட்டது.மூன்றாவது இடத்தை புண்யா மற்றும் ஷாம் விஷால் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.  

மூக்குத்தி முருகனின் தேர்வு சரியானதே என்ற பொதுவான கருத்து நிலவி வரும் நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவோ தனது ட்விட்டர் பக்கத்தில் அம்முடிவை கடுமையாகச் சாடியிருக்கிறார்....  டெக்னிக்கல் ரீதியாக சிறந்த போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் எப்போதும் கொடுக்கப்படுவதில்லை என்பதை  நான் நம்புகிறேன். இறுதிப்போட்டியிலிருந்த ஐவரில் விக்ரம் மற்றும் புண்யா இருவருமே  மியூசிக் அடிப்படையில் தகுதியானவர்கள். சத்யபிரகாஷ் டைட்டில் வின்னர் ஆனதிலிருந்தே போங்கு தொடங்கிவிட்டது. எப்போதாவது நியாயமான முறையில் சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பார்க்கிறேன்...என்று அப்பதிவில் கிண்டலடித்துள்ளார் அவர். நடிகை ஸ்ரீபிரியாவின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து  தெரிவித்து வருகின்றனர்...உங்க கமல் தொகுத்து வழங்கும் BB நியாயமான வெற்றியாளரை தான் தேர்ந்தெடுக்கிறதா...? நியாயம் இல்லாத விஜய் டிவிக்கு உங்க கமல் எதுக்கு முட்டு கொடுக்குறார்...? அடுத்தவனுக்கு உபதேசம் செய்யும் முன் உங்க முதுகு அழுக்க கழுவுங்க...என்று ஒருவர் கமெண்ட் அடித்திருக்கிறார்.