கடந்த சில தினங்களாகவே ‘கமலிஸம்’என்ற பெயரில் நடிகர் கமலின்  60 ஆண்டுகால சினிமா பங்களிப்பு சிலாகிக்கப்பட்டு வரப்படும் நிலையில் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசனும் தன் பங்குக்கு அப்பாவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரத்தி எடுத்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கு முன்பு ’களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆகஸ்ட் 12, 1959-இல் தொடங்கிய அவருடைய சினிமா பயணம் வெற்றிகரமாக 60 ஆண்டுகளை எட்டியுள்ளது.  துவக்கத்தில் பொறுப்பற்று பலதரப்பட்ட படங்களில் நடித்து வந்த கமல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரும்பாலும் தரமான படங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினார். கமல்ஹாசன் சினிமாத்துறையில் மட்டுமில்லாமல், மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி செயல்பட்டுவருகிறார். அவரது கட்சி கடந்த பொதுத் தேர்தலில் குறிப்பிடும்படியான வாக்குகளை பெற்று ஓரளவு நல்ல செல்வாக்குடன் உள்ளது.

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, ஒரு தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் பிக் பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும், அதே நேரத்தில் தனது கட்சியை பலப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இந்த சூழலில்தான் கமல்ஹாசன் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவருடைய ரசிகர்கள், சினிமா துறையினர், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, சமூக ஊடகங்களில் #கமலிசம் என்ற வார்த்தையும் ட்ரெண்டாகி வருகிறது. கமலின் முதல் படம் தொடங்கி தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் ‘இந்தியன் 2’ ஸ்டில்கள் வரை அந்த கமலிஸத்தில் இடம் பிடித்து வருகின்றன.

இந்நிலையில் அந்த நெகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி,...“அன்புள்ள பாபுஜி, நடிப்புலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்து எங்களை பெருமைப்படுத்தியிருகிறீர்கள். நீங்கள் எங்களில் பலருக்கும் ஊக்கமளித்திருக்கிறீர்கள். தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தமான ’மகாநதி’ படத்தின் போஸ்டரை பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளேன். அழகான, தைரியமான, உணர்ச்சிப்பூர்வமான வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். கலைத்துறைக்கு 60 ஆண்டுகளாக உங்களை நீங்கள் அர்ப்பணித்துக்கொண்டுள்ளீர்கள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேல் உங்களுடைய
கலைப் பயணம் தொடரட்டும்.” என ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.