தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து, தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கர்நாடகாவின் குடகு மாவட்டம் விராஜ்பேட்டில் அமைந்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் வீட்டில், கடந்த 16ம் தேதி வருமான வரிச்சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது ராஷ்மிகா மந்தனா வீட்டில் இல்லை, ஐதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் இருந்தார்.

ராஷ்மிகா மந்தனாவின் வீட்டில் காலை 7.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில் ராஷ்மிகா மந்தனா வீட்டில் இருந்து கணக்கில் வராத 25 லட்சம் ரொக்கமும், கோடிக்கணக்கிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. 

இதனிடையே ராஷ்மிகா மந்தனா கடந்த திங்கட்கிழமை  ஆடிட்டருடன் வருமான வரித்துறை அலுவலகம் சென்று தனது சொத்து மதிப்பு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். அதன் மூலம் ராஷ்மிகா மந்தனாவிற்கு சுமார் 250 கோடி வரை சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்க வந்து குறுகிய காலங்களே ஆன நிலையில், ஒரு சில ஹிட் படங்களில் மட்டுமே நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா இந்த அளவிற்கு சொத்து சேர்த்துள்ளது டோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.