ஏ.ஆர். முருகதாஸ்  - ரஜினிகாந்த் கூட்டணியில் நேற்று "தர்பார்" படம் ரிலீஸ் ஆனது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் பிரம்மாண்ட முறையில் வெளியான "தர்பார்" படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியான நயன்தாராவிற்கு அதிக ஸ்கோப் இல்லை என்பது மட்டுமே ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. 

வழக்கமான ரஜினியின் மாஸ் என்டர்டெயின்மெண்ட் படமாக  வெளியான "தர்பார்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நேற்று வெளியான "தர்பார்" திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களும் தியேட்டர்களுக்கே சென்று கண்டு ரசித்தனர். அத்துடன் படம் குறித்த தங்களது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் உடன் "தலைவர் 168" படத்தில் நடித்து வரும் குஷ்பூ "தர்பார்" படத்தை பார்த்துவிட்டு அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பூ, "ரஜினியை விட்டு உங்களது கண்களை நகர்த்தவே முடியாது. தனது ஸ்டைலால் ரஜினி காந்தம் போல ஈர்க்கிறார். அவர் மட்டும் தான் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பதில் ஆச்சர்யமில்லை. தர்பார் பொங்கல் ட்ரீட். முருகதாஸுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.