சொந்த விவகாரங்கள்,அரசியல்,சினிமா என்று சகல சமாச்சாரங்கள் குறித்து தனது கருத்துக்க்களைப் பதிவிட்டு, அவ்வப்போது ஆக்ரோஷ பதிவுகளையும் போட்டு வந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் கணக்குக்கு டாட்டா காட்டி விடைபெற்றார்.’இங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை’என்பது அவரது புகாராக இருக்கிறது.

 ட்விட்டர் தளத்தில்  மற்ற எல்லோரையும் விட ஆக்டிவாக எப்போதுமே இயங்குபவர் நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு, பாஜக கட்சியினர் தொடர்பான செய்திகளுக்கு தன்னுடைய எதிர்ப்புகள் அனைத்தையுமே உடனுக்குடன் தனது ட்விட்டர் பக்கத்திலேயே பதிவிட்டு வந்தார்.மேலும், கணவர் சுந்தர்.சி இயக்கி வரும் படங்கள் குறித்த செய்திகள், ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றையும் குஷ்புவே வெளியிட்டார். அவ்வப்போது சில சர்ச்சையான பதிவுகளையும் அவர் வெளியிடுவதுண்டு.அந்த சமயங்களிலெல்லாம் தன்னை ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் என்று பலரும் கூறி வந்தபோது, 'ஆம். நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்தான். என் பெயர் நக்கத் கான்' என்று வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தவர் குஷ்பு.

இப்படி படு சூப்பராக ட்விட்டரில் இயங்கிவந்தவர் திடீரென்று முன்னறிவிப்பு எதுவுமின்றி தனது கணக்கை இழுத்து மூடிவிட்டார். இத்தனைக்கும் இன்னும் மூன்று தினங்களில் அவரது கணவர் சுந்தர்.சி.யின் ஆக்‌ஷன் படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் தனது கணக்கை மூடிய குஷ்பு "எனது ட்விட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். ட்விட்டர் தளத்தில் இயங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவுமில்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். ட்விட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்களே உள்ளன. ஆகவே, நான் எனது இயல்பில் இல்லை" என்று கடைசி பதிவு ஒன்றைப்போட்டுவிட்டு அதற்கு தனது ஃபாலோயர்களின் பதிலைக்கூட எதிர்பாராமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.