Asianet News TamilAsianet News Tamil

எந்த தோல்வியும் தாற்காலிகம் என்பதை உணரவேண்டும்! நீட் தேர்வு எழுதிய மாணவர்களை ஊக்க படுத்திய நடிகை கஸ்தூரி!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா உள்பட 3 மாணவிகளின் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

actress kasthuri motivate neet exam students
Author
Chennai, First Published Jun 6, 2019, 3:39 PM IST

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா உள்பட 3 மாணவிகளின் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார்கள்.  நீட் தேர்வின் முடிவுகள் இன்று மதியம் 1.35 மணியளவில் வெளியானது. இதில் நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

actress kasthuri motivate neet exam students

மருத்துவராக வேண்டும் என்கிற நினைப்பில், நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்ச்சியடையாதது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதன்காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்போது வரை 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்நிலையில் மாணவ மாணவிகளை தேற்றும் விதமான, நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவிற்கு பலர் தங்களுடைய வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்...

actress kasthuri motivate neet exam students

நீட் தேர்வோ, பள்ளி இறுதி தேர்வோ, எந்த தோல்வியும் தாற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது, அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ளவேண்டும். நம்மவர்கள் பலரும், யாராவது தடுக்கிவிட்டால், அதை சொல்லிக்காட்டியே அந்த நபரை மனஉளைச்சலில் வீழவைப்பதில் சூரர்கள்.. மற்றவர் கஷ்டத்தில் மீன் பிடிக்கும் கில்லாடிகள். தயவு செய்து சிறார்கள் படிப்பும் வாழ்க்கையும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடக்கலாமே?

தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று மீண்டும் முயலவும் வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்கிறார்கள். பெற்றோருக்கு முதலில் counselling தேவைப்படுகிறது!

இது போதாது என்று அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள் , உண்மையாகவே கொள்கைரீதியாக NEET ஐ எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக்கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். 
அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அனிதாவை போல தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தை தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.

actress kasthuri motivate neet exam students

பிள்ளைகளே, நீங்கள் நினைக்கலாம், உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே போயிற்று, உங்கள் பலவருட கனவு தவிடுபொடியாயிற்று என்றெல்லாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் என்று யாருக்கு தெரியும்? இன்று கீழே இருப்பவர் நாளை மேலே செல்வார்...நாளை என்ன நடக்கும் என்று வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும்? இன்னும் சொல்ல போனால், இந்த உலகம் ஒரு பரிட்சையோடு நின்று விடுமா?எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகள் உங்களுக்காகவே காத்துகொண்டு உள்ளன தெரியுமா?

சந்தோஷங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லையே, உலகம் உருண்டை, சுழலதான் செய்யும், இல்லையா? பகலும் இரவும் மாறி மாறித்தான் வரும்... இருள் வந்தால் அடுத்து வெளிச்சம் வரும் என்றுதானே பொருள்? இருளை பார்த்து மிரண்டு அவசரப்பட்டு வெளிச்சத்தை பார்க்காமலே போய்விடலாமா?

நாளை வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ ஏமாற்றங்களை சந்திக்கவேண்டிவரலாம், நம்மில் பெருவாரியானவர்களுக்கு வாழ்க்கை என்பதே போராட்டம்தானே ? அந்த போராட்டத்தில் ஜெயிக்க இந்த சின்ன தோல்வி ஒரு பயிற்சி என்று எடுத்துக்கொள்ளுங்கள் செல்லங்களே! என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எதை இழந்தாலும் நம்பிக்கையும் போராட்டகுணத்தையும் கைவிடாதீர்கள் செல்வங்களே!

Follow Us:
Download App:
  • android
  • ios