மருத்துவ உலகில் நடக்கும் மோசடிகளை நாம் அன்றாடம் அனுபவித்து வரும் நிலையில் தனக்கு ஒரு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டபோது அதற்கு ரூ 1 லட்சம் வரை  பில் தீட்டிய ஹாஸ்பிட்டல் ஒன்றின் கொடூர முகத்தை தன் பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் போட்டுடைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

’கனா’வுக்குப் பின்னர் போதும் போதும் என்கிற அளவுக்கு ஐஸ்வர்யாவின் கைவசம் படங்கள். இது போதாதென்று கனா’வின் தெலுங்கு ரீமேக்கான கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி வரும் வெள்ளியன்று தெலுங்கில் ரிலீஸாகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த தனது ‘மெய்’பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “ஒரு நாள் லேசான காய்ச்சல். ஆஸ்பிடலுக்கு போனேன். அது இதுன்னு எக்கச்சக்க டெஸ்ட் பண்ணி சுமார் ஒரு லட்சம் பில் போட்டுட்டாங்க. கடைசியில் எனக்கு டோலோ 650 கொடுத்து அனுப்பிட்டாங்க. ஒரு நடிகையான என்கிட்டவே இப்பிடினா சாதாரண பொதுமக்கள்ட்ட இப்படி பண்ணினா அவங்க என்ன பண்ணுவாங்க?” என்று வருந்தினார்.

’மெய்’  படத்தின் பிரஸ்மீட்டில் அவர் இந்த தகவலை சொல்லக்காரணம்? மெடிக்கல் உலகத்தில் நடக்கும் கொடுமைகளை சொல்கிற படம்தானாம் இது. அதை தன் பிரச்சனையோடு கனெக்ட் பண்ணினார் ஐஸ்.‘மெய்’ படத்தில் வேறென்ன விசேஷம்? பிரபல மோட்டார் நிறுவனமான டி.வி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இது. டி.வி.எஸ் ஐயங்காரின் பேரன்தான் இந்தப்படத்தின் ஹீரோ நிக்கி சுந்தரம்.