பிரபல காமெடி நடிகர் விவேக், தளபதி விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து மரம் நடும் பணியை செய்து வருவதை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ட்விட் போட்டுள்ளார்.

பொதுவாக, பெரிய நடிகர்கள் படங்கள் வரும் போது, ரசிகர்கள் அனைவரும் நடிகர்களுக்கு பிரமாண்ட கட் அவுட் வைத்து, பால் அபிஷேகம், வெடி, ஆட்டம் பாட்டம் என போக்கு வரத்து நெரிசலை உண்டாக்குவது, மக்களுக்கு இடையூறாக நடந்து கொள்வது, சமூக அக்கறை கொண்ட பலரை விமர்சிக்க வைக்கும்.

இதே போல் பல முறை பிரபல காமெடி நடிகர் விவேக் நேரடியாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், யார் நல்ல விஷயங்களை செய்தாலும் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கவும் அவர் மறந்தது இல்லை.

அப்துல் கலாம் அவர்களின் வழிக்காட்டுதல் படி, தொடர்ந்து மரம் நடும் பழக்கத்தை வைத்துள்ள விவேக், இதே பணியை செய்து வரும் தளபதி விஜயின் ரசிகர்களை, ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... "அன்பு விஜய்யின் ரசிகப் பெருமக்கள் மரம் நடுவதில் முனைப்புடன் செயல்படுவது ஆரோக்கியமான ஆரம்பம்! இது இத்துடன் நிற்றல் கூடாது. தொடர வேண்டும்! வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். பலரும் இந்த பதிவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.