சில விஷயங்களை சொன்னால் நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். நடிகர் விவேக் பற்றிய இந்த செய்தியும் கண்டிப்பாக அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான். சுமார் 32 வருடங்களாக தமிழ் சினிமாவை தன் தரமான நகைச்சுவையால் கட்டிப்போட்டிருக்கும் அவர் இதுவரை ஒரு படத்தில் கூட கமலுடன் சேர்ந்து நடித்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. ஆனால் அந்த அநியாயம் மிக விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது.

நடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்று முதல் லேட்டஸ்டாக அவர் நாயகனாக நடித்து ரிலீஸான ‘வெள்ளைப் பூக்கள்’ வரை சுமார் 32 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார். இந்த 32 ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான உச்ச நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் தற்செயலாக  இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை. 

கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என விவேக் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்திருந்தார். தற்போது அது நிறைவேற உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நீண்ட துயரத்திற்கு ஷங்கர் முடிவு கட்டியவரையில் சந்தோஷம்.