’நல்ல கருத்துக்களைப் படங்களில் சொல்ல ஆரம்பித்தபோதே நானும் அரசியலுக்கு வந்துவிட்டேன். எதிர்காலத்தில் தேவைப்படும்போது நானும் அரசியலுக்குக் கண்டிப்பாக வருவேன்’என்று கமல் பாதி ரஜினி பாதியாகக் கலந்து பேசுகிறார் நகைச்சுவை நடிகர் விவேக்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1978-ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த நடிகர் விவேக், தனது கல்லூரி கால நண்பர்களுடன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

முன்னாள் நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நடந்து முடிந்த நிகழ்வுக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய விவேக்,”

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், குளங்கள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் தண்ணீர் பிரச் சினை ஏற்பட்டுள்ளது. மரங்கள் அதிக எண்ணிக்கையில் வெட்டப்பட்டதுதான் இதற்குக் காரணம். தொடர்ந்து மரங்களை நட வேண்டும்.அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப் பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். 

தற்போது மரக்கன்றுகளை நடவு செய்தால்தான் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மூலம் அதிக மழையைப் பெற முடியும்.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மூதாட்டி ஆகி வருகிறது. அரசியான ஊட்டியையும் மூதாட்டியாக மாற்றி வருகிறோம் என்றார்.

 அடுத்து அரசியல் எண்ட்ரி குறித்து நடிகர் விவேக்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’ஏற்கனவே அரசியலில் அதிகம் பேர் உள்ளனர்.நல்ல கருத்துக்களைப் படங்களில் சொல்ல ஆரம்பித்தபோதே நானும் அரசியலுக்கு வந்துவிட்டேன். எதிர்காலத்தில் தேவைப்படும்போது நானும் அரசியலுக்குக் கண்டிப்பாக வருவேன்’ என்றார்.