அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ கதைத் திருட்டுப் பஞ்சாயத்திலிருந்து இயக்குநர் பாக்யராஜ் ஒதுங்கியிருக்கவேண்டும் எனபதற்காகவே சாந்தனுவின் புதிய படத்துக்கு அவர் அவசர அவசரமாக வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார் என்று மட்டரகமான சில செய்திகள் நடமாடிவருகின்றன.

பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கும் ‘ராவணக்கோட்டம்’ என்ற புதிய படத்துக்கு நேற்று பூஜை போடப்பட்டது. இப்படத்தை ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்குகிறார். இப்படத்துக்கு தனக்கு ட்விட்டர் மூலம் நடிகர் விஜய் வாழ்த்துச் செய்தி அனுப்பியதாகத் தெரிவித்த சாந்தனு அதில், ''காலை எழுந்ததும் , வாழ்த்துகள் நண்பா, செம டைட்டில், என முதல் ஆளாக, மெசேஜ் அனுப்பி என்னைப் பாராட்டிய விஜய் அண்ணாவுக்கு நன்றிகள் பல. இந்த ஒரு வார்த்தையே போதும், படத்திற்காக, எவ்வளவு கடுமையாக உழைக்கவும் தேவையான எனர்ஜி கிடைத்துவிட்டது,'' என குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விஜயின் இந்த வாழ்த்தை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துபோகவேண்டியதில்லை என்று கருத்துக்கூறும் சிலர், இதற்கு முன்னர் ‘சர்கார்’ கதைத் திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் எவ்வளவு முக்கிய பங்கு வகித்து விஜய் கோஷ்டியினரை மண்ணைக் கவ்வ வைத்தார் என்பதை நினைவு கூர்ந்து, அதே நிலைமை ‘தளபதி 63’ படத்துக்கும் வந்துவிடாமல் இருக்க, அதாவது கடைசி வரை பாக்யராஜ் தலையிடாமல் இருக்கவே அவரது வாரிசுக்கு இப்படி ட்விட்டர் பொக்கேயை அனுப்பியிருக்கக்கூடும் என்கிறார்கள்.

ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்புனா அதுல கூட இப்பிடியாய்யா குத்தம் கண்டுபிடிப்பீங்க?...