மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வரும் 31ம் தேதி வெளியாகவிருக்கும் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ பட புரமோஷனின் ஒரு பகுதியாக இன்று மாலை 5 மணிக்கு அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுகிறார். இத்தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞராக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சமகால அரசியல் குறித்து மிக சர்ச்சையான சமாச்சாரங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இதற்கிடையே நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு ட்விட்டர் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளளது. இந்த உரையாடலில் சூர்யாவிடம் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.