சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்பது வேறு என்றும் மக்களின் மத நம்பிக்கை என்பது வேறு என்றும் நடிகர் சுரேஷ் கோபி விளக்கமளித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம். ஆணும் பெண்ணும் சமம் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் வரவேற்றும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கேரளாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த திரண்டிருந்தனர். அப்போது உச்சநீதிமன்றத்துக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கேரள பெண்கள் ஏன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்? 'அந்த 5 நாட்களில்' அவர்களை கோயிலுக்கு செல்ல தூண்டவில்லை. அது அவரவர் விருப்பம். கடவுள் என்ன நினைக்கிறார் என்பது யாருக்குத் தெரியும்? என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கேரளாவில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பாரம்பரியமிக்க சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த பெண்களுக்கு அனுமதி அளிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர் சுரேஷ் கோபியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும்வரை போராட்டம் நடத்த தயார் என்றும் நடிகர் சுரேஷ்கோபி சூளுரைத்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது வேறு என்றும், மக்களின் மத நம்பிக்கை என்பது வேறு என்றும் நடிகர் சுரேஷ்கோபி விளக்கமளித்துள்ளார்.