Actor sri Devi expires heart attack in dubai
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 54.
நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர். இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.

சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர். புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பின், தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில், துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு அங்கே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை அவரது உறவினர்களும் உறுதிசெய்துள்ளனர்.
அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
