கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகல் மட்டுமே மக்களின் உயிரை காக்கும் ஒரே வழியாக உள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். 

இதனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் கொஞ்சம் உதவினால் பெப்சி தொழிலாளர்களுக்கு கஞ்சி சோறாவது கொடுக்கலாம் என அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ரஜினி, சிவகார்த்திகேயன், நயன்தாரா, உள்ளிட்டோர் லட்சங்களை வாரி வழங்கினார். தயாரிப்பாளர் தாணு 25 மூட்டை அரிசியும், இயக்குநர் ஹரி 100 மூட்டை அரிசியும், நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூட்டை அரிசியும் கொடுத்துள்ளனர். 

பிரபல நடிகர் சூரி பொது மக்களை மகிழ்விக்கவும் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தன் குடும்பத்தோடு இணைந்து தினம் ஒரு வீடியோ தன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கரோனா  வைரஸ் விழிப்புணர்வு வீடியோக்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.  

அதுமட்டுமின்றி, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நிவாரணமாக 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மேலும் அவரது உணவகத்தில் பணிபுரியும் 350 தொழிலாளர்களுக்கு எவ்வித பிடித்தமும் செய்யாமல் முழு சம்பளமும், லீவு கொடுத்துள்ளார். தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக 25 கிலோ அரிசி அடங்கிய 100 மூட்டைகளை வழங்கியுள்ளார். வறுமையால் வாடிய குடும்பத்தில் பிறந்து, தற்போது இப்படி ஒரு நிலைக்கு முன்னேறியுள்ள சூரி, பழசை மறக்காமல் பசியால் வாடுவோருக்கு தன்னால் ஆனதை செய்து வருகிறார்.