நடிகர் சோனு சூட் அடுத்தடுத்து செய்து வரும் உதவிகளுக்கு தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது கொரோனா பேரிடர் காரணமாக வேலையிழந்து தவித்து வரும் சுமார் 3 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை ஏற்படுத்தி உதவ முடிவு செய்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும் சோனு சூட், சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி, உள்ளிட்ட சில தமிழ் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். கொரோனா தொற்று காரணமாக பல ஏழை மக்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சினிமாத்துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட போது, பிரபலங்கள் பலர் குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு விலகிவிட்டனர்.

ஆனால் சோனு சூட், சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்த 1000 யிரத்திற்கும் மேற்பட்ட, புலம் பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல, பஸ், பிளைட், போன்றவற்றை ஏற்பாடு செய்து தந்ததோடு, இவரே நேரில் வந்து அவர்களை வழியனுப்பியும் வைத்தார். அதே போல் உணவின்றி கஷ்டப்பட்டு வந்த பலருக்கு சாப்பாடு கொடுத்து கொடுத்ததும் உதவினார்.

எனவே இவரை வில்லனாகவே பார்த்து வந்த பலர், ரியல் ஹீரோவாக பார்க்க துவங்கி விட்டனர். சமீபத்தில் இவர் பிறந்தநாள் கொண்டாடிய போது கூட, இவரை பலர் ரியல் ஹீரோ என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்ததை அதிகம் பார்க்க முடிந்தது.

இதையும் தாண்டி, கடந்தவாரம் ஆந்திராவை சேர்ந்த விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதிலாக பெற்ற மகள்களை வைத்து ஏர் உழுததை அறிந்து அவருக்கு, டிராக்டர் வாங்கி கொடுத்தார். ஹைதராபாத்தை சேர்ந்த சாரதா என்கிற பெண் கொரோனவால் தான் செய்து வந்த சாப்ட் வேர் என்ஜினீயர் வேலையை இழந்து கஷ்டப்பட்ட போது உடனடியாக வேலை வழங்கி உதவினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இதையெல்லாம் தொடர்ந்து, கொரோனா தாக்கத்தால்... வேலை இழந்து கஷ்டப்படும் சுமார் 3 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தரும் முயற்சியில் சோனு சூட் இறங்கியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு வழக்கம் போல் இவரை ஆஹா... ஓஹோ... என பலர் மனதார பாராட்டி வருகிறார்கள்.