கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள், மக்கள் மற்றும் தொழிலதிபர்கள் முடிந்த நிதி உதவி அளிக்குமாறு அறிவித்துள்ளது. இதையடுத்து பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள், பிரதமரின் நிதிக்கும், முதலமைச்சரின் நிதிக்கும் தொடர்ந்து தங்களுடைய உதவிகளை அறிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக முதல்வரின் நிதிக்கு, ரூ.25 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இவரை தொடர்ந்து பல பிரபலங்கள் முதல்வரின் நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தான், வேலை இல்லாமல் கஷ்டப்படும் பெப்சி தொழிலாளர்களுக்கு, நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி கொடுத்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து சிவகார்த்திகேயன் செய்து வரும் உதவிகளால், இவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராகவும் மக்களால் பார்க்கப்படுகிறார். மேலும் நெட்டிசன்கள் பலர் இவருக்கு தங்களுடைய நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.