கைவசம் படங்கள் எதுவுமின்றி தன்னை ஆதரித்துப்பேசக் கூட ஆட்களின்றி முற்றிலும் தனிமைப்பட்டுக் கிடக்கும் நடிகர் சிம்பு, திடீர் ட்விஸ்டாக ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு 40 நாட்கள் விரதம் இருக்கப்போகிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மனம் திருந்திய இந்த மைந்தனுக்காக சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

சில பல மாதங்களாகவே நடிகர் சிம்பு பல்வேறு சிக்கல்களில் மாட்டி சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்த சங்கதி. அவரை ‘மாநாடு’படத்திலிருந்து நீக்கி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எடுத்த முடிவு சிம்புவின் கண்ணைத் திறந்தாலும் உடனே திருந்துவது நம்ம கேரக்டருக்கு செட் ஆகாதே. ஜனங்க நம்ப மாட்டாங்களே’என்று குழம்பித் தவித்துவந்தார் அவர். இந்நிலையில் பார்ட்டிகளுக்கு செல்வதற்கு அவரது தந்தை டி.ஆர் பாக்கெட் மணி தர மறுத்தது, அவரது இன்னொரு கண்ணையும் திறந்தது.

இதனால் நண்பர்கள் மற்றும் சில நடிகைகளிடம் கடன் வாங்கத் துவங்கிய சிம்புவை சில தினங்களுக்கு முன்பு அழைத்த டி.ஆர்,’இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்பிடியே இருந்தீன்னா சினிமாவுல எல்லாரும் உன்னை மறந்துருவாங்க. உன் நடவடிக்கை எல்லாத்தையும் மாத்து’என்று உருக்கமாக அட்வைஸ் செய்து, அதற்கான பரிகாரத்தையும் அவரே கூறியிருக்கிறார். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட சிம்பு இரண்டாவது முறையாக ஐயப்பன் சுவாமிக்கு வேண்டுதல் வைத்து, 40 நாட்கள் விரதம் இருந்து மலையேற முடிவு செய்திருக்கிறார். நாளை நவம்பர்5ம் தேதியன்று இதற்கான பூஜை அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.அந்த பூஜையில் கலந்துகொள்ள ‘மாநாடு’படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது ஒரு கூடுதல் செய்தி.