தனது இமேஜ் அளவுக்கு அதிகமாக டேமேஜ் ஆவதைத் தொடர்ந்து முகநூல், ட்விட்டர் வலைதளங்களில் ஏகப்பட்ட ஃபேக் ஐடிகள் மூலம் அவற்றுக்கு எதிராக முட்டுக்கொடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் நடிகர் வம்புத் தம்பி சிம்பு.

சர்ச்சைகளின் தலைமையிடமான சிம்புவுக்கு ‘மாநாடு’பட டிராப்புக்குப் பிறகு சோதனைகள் அதிகம் நிகழ ஆரம்பித்தன. அவரால் பாதிக்கப்பட்ட ‘ஏ ஏ ஏ’படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் துவங்கி சுரேஷ் காமாட்சி,ஞானவேல் ராஜா என்று அவரால் பாதிக்கப்பட்டவர்களும்  அனைவரும் ஒன்று சேர்ந்தனர். அதை ஒட்டி பிரச்சினைகளை ஆறப்போட தம்பி சிம்பு இரு மாதங்கள் தாய்லாந்து போய் ஜாய்லாந்து செய்துவிட்டுத் திரும்பினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய அவர் தன்னால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களை சந்தித்து நிலைமைகளை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லையாம். இந்நிலையில்  சிம்பு நடிக்கும் ’மப்டி’ எனும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடத்தில் சிம்புவிற்கு மூன்றாவது படம் நிறுத்தப்படுகிறது. ’கான்’, ’மாநாடு’ படங்களை தொடர்ந்து இந்த படமும் டிராப் ஆகியுள்ளது. கன்னட படமான மப்டி படத்தினை ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா  இன்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

அதில் சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை. இதனால் படத்தின் செலவு பெரிய அளவில் அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது. முதல் 10 நாட்கள் ஷூட்டிங்கே கூட ஒழுங்காக நடக்கவில்லை. அந்நிலையில் படப்பிடிப்பிலிருந்து சிம்பு சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிட்டார்  என்று அவர் தனது புகாரில் கூறியிருந்தார்

ஞானவேல் ராஜாவின் புதிய புகார் தனது எதிர்காலத்தைப் பெரிய அளவில் சேதாரம் செய்யும் என்று பயந்துபோன சிம்பு ஒரு பக்கம் அவருக்கு தூது அனுப்பிக்கொண்டே இன்னொரு பக்கம் தனது அல்லக்கைகள் மூலம் ஏகப்பட்ட ஃபேக் ஐடிகளை உருவாக்கி படம் டிராப் ஆகலே நம்பாதீங்க’என்று கூக்குரல் இட்டு வருகிறார்கள்.