‘12 பி’, 'லேசா லேசா’, ‘6 திரி’ உள்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஷாம். இவருக்கு சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு அதிரடியாக அடுக்குமாடி வீட்டுக்குள் புகுந்து போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நடிகர் ஷாம் உட்பட 13 பேர் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

 
அவர்களிடமிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டுக் கட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த அடுக்குமாடி வீட்டில் பல நாட்களாக சூதாட்டம் நடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சீட்டு விளையாடவே நடிகர்கள், இயக்குனர்கள் உள்பட பலரும் வருவது வாடிக்கை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த அடுக்குமாடி வீட்டை வீட்டை நடிகர் ஷாம் ஒரு சூதாட்ட கிளப் போல் நடத்திவந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. சூதாட்டப் புகாரில் நடிகர் ஷாம் கைதாகியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.