கொரோனா பீதி பற்றி எரியும் நிலையில், கடந்த மாதம் மார்ச் 13 முதல் 15 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டில் தமிழகத்தில் மொத்தம் 1130 பேர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என, சுகாதாரத்துறை தொடர்ந்து, பரிசோதித்து வருகிறது. 

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சோதனை முடிந்துள்ளதாகவும், மற்றவர்கள் சோதனைக்கு ஒத்துழைக்காததாலும், தலைமறைவாக உள்ளதாலும், அவர்களை பரிசோதிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் பற்றி, நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... "டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மீது மத துவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம். சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.