தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்த சந்தானம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.  அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்',' இங்க என்ன சொல்லுது',' இனிமே இப்படித்தான்', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு', ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், சந்தானம் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது 'தில்லுக்கு துட்டு 2 ' படத்தை பற்றி அவர் கூறுகையில் பொதுவாக பேயை பார்த்து தான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், மனிதர்களைப் பார்த்து பயப்படுவது போல் தில்லுக்கு துட்டு 2 படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் தான் ஆட்டோ டிரைவராக வருவதாகவும், சந்திரபாபு நாகேஷ் ஆகியோர் படங்களை பார்த்த திருப்தி இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். ஸ்ரீதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். எங்கள் இருவருடன் மொட்டை ராஜேந்திரன், சிவசங்கர் மாஸ்டர், ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  

இதை தொடர்ந்து மீண்டும், காமெடி களத்தில் நடிக்க வருவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  தொடர்ந்து கதாநாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார். பின் நான் நடித்து முடித்த சில படங்கள் திரைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் அல்ல அந்த படங்களில் நான் நடித்து முடித்துவிட்டேன்.  'தில்லுக்கு துட்டு' என் சொந்த படம் என்பதால் அதை குறிப்பிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வருவேன் என சந்தானம் கூறியுள்ளார்.