தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரஷ்மிகா மந்தனா. நடிக்க ஆரம்பித்து 4 வருட காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்ட ராஷ்மிகாவின் சொந்த ஊர் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பொக்கலூரு கிராமம் .

நடிகை ராஷ்மிகா அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறையினருக்கு வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விராஜ்பேட்டையில் உள்ள நடிகை ராஷ்மிகாவின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது ராஷ்மிகாவின் குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். நடிகை ராஷ்மிகா படப்பிடிப்புகாக வெளியூர் சென்றுவிட்டதால் அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

வீட்டில் இருந்த நகைகள், ரொக்கப்பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நடிகை ராஷ்மிகா நடிப்புத் தொழிலில் மட்டுமல்லாது, விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்தது. மேலும் கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.

மேலும் விராஜ்பேட்டையில் உள்ள ராஷ்மிகாவுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்  2 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 இடங்களிலும் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவை குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.