கடந்த ஒரு வார காலமாகவே ஒவ்வொரு கட்சியினரும் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் திருவள்ளுவருக்கு அங்கவஸ்திரம் அணிவித்து மகிழ்ந்துவரும் நிலையில், ஒரு மிகப்பெரும் மகானான அவரையுமா சந்திக்கு இழுக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் நடிகர் ராஜ்கிரண்.

இது தொடர்பாக நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,...நம் கண்களுக்குத்தெரியாத, நம் அறிவுக்கும் புலப்படாத, இந்து, கிருஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் தோன்றுவதற்கு, எவ்வளவு காலத்திற்கு முன்பு என்று கூட, கணிக்க முடியாத காலகட்டங்களில் வாழ்ந்த, "திருவள்ளுவர்" என்று அழைக்கப்படும், ஒரு மிகப்பெரும் "மகானை", சந்திக்கு இழுத்திருக்கிறார்கள், நம் அரசியல்வாதிகள்...

நம் கண்களுக்குத்தெரிந்து, நம் அறிவுக்கு புலப்பட்டு, எத்தனையோ சீர்கேடுகள், நம் நாட்டில் நிலவுகின்றன...அதையெல்லாம் மறக்கடிக்கத்தான்,
இந்த கூத்துக்களோவென்று தான், எண்ணத்தோன்றுகிறது...

எது எப்படியிருந்தாலும், "தகுதித்தேர்வு" வைத்து, அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படாத வரையில், மக்கள் இப்படியான கூத்துக்களைத்தான் தொடர்ந்து
பார்த்துக்கொண்டிருப்பார்கள்...
வாழ்க ஜனநாயகம்.
வாழ்க மக்கள் நலன்.
வாழ்க அரசியல்வாதிகள்...என்று அப்பதிவில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் ராஜ்கிரண்.