அரசியலிலும் சினிமாவிலும் தொண்டர்களிடம் ‘அப்படிச் செய்யவேண்டாம் ‘ என்றால் உடனே செய்யுங்கள் என்று உள்ளார்ந்த அர்த்தம் ஒன்று உண்டு. அந்த உள்ளார்ந்த அர்த்தத்தோடு திருநங்கைகளையும் மாற்றுத் திறனாளிகளையும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு எதிராகத் தூண்டிவிடும் வேலையில் கனகச்சிதமாக இறங்கியிருக்கிறார் பேய்க்கதை மன்னன் ராகவா லாரன்ஸ்.

கடந்த சில தினங்களாகவே நடிகர் ராகவா லாரன்சும், நாம் தமிழர் கட்சியினர் சிலரும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் உச்சமாக, லாரன்ஸ் மாற்றுத் திறனாளிகளையும் திருநங்கைகளையும் தனது பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் நேற்று மும்பையில் ‘காஞ்சனா’ இந்தி ரீ மேக் படப்பிடிப்பில் இருந்தபடி லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்.

என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடை பிடியுங்கள். நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம்' என்று உள்ளார்ந்த அர்த்ததுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.