நடிகர் சங்கத்தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் இரண்டாவது முறையாகப்போட்டியிடும் தேர்தல் வரும் 23 ம் தேதி திட்டமிட்டபடி நடக்காது என்று அடித்துக்கூறுகிறார் விஷால் அணியின் நிரந்தர வில்லன் ராதாரவி.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய ராதாரவி,”கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டப்போது மாற்றம் மாற்றம் என்று புழுகியபடியே பதவிக்கு வந்தார்கள். ஆனால் மிஞ்சியதென்னவோ ஏமாற்றம் தான்.இதுவரை நடத்திய எந்த கலைநிகழ்ச்சிக்கும் விஷால், நாசர் கோஷ்டியினர் கணக்கே கொடுக்கவில்லை. ஒரு முறை என்னிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக நாசர் பொய் சொன்னார். அப்படியானால், நீங்கள் உண்மையான முஸ்லீம் என்றால் குரான் மீது சத்தியம் செய்யுங்கள் என்று நாசரிடம் கூறினேன். அடுத்து அவர் அந்தப் பேச்சையே நிறுத்திக்கொண்டார்.

இப்போது எஸ்.வி.சேகர் சொல்வதையே நானும் சொல்கிறேன். புகார் கொடுக்கவேண்டியவர்களிடம் அத்தனை விபரங்களையும் ஒப்படைத்துவிட்டோம். இந்தத் தேர்தல் நடைபெறாமல் இருக்க ஏக்கப்பட்ட விதிமுறை மீறல்கள் உள்ளன. எனவே அவற்றை விசாரிக்கும்போது விஷாலும் நாசரும் அம்பலப்பட்டு நிற்பார்கள். எனவே வரும் 23ம் தேதி நடிகர் சங்கத்தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை” என்று விஷால் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார் ராதாரவி.