சென்ற ஆண்டின் சிறந்த நடிகருக்கான சைமா விருதை ‘கூடெ’படத்துக்காக வென்ற நடிகர் பிரித்விராஜ், விருது வாங்கியவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களுக்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தார். துபாயில் நேற்று மாலை நடந்த அவ்விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பிரித்விராஜுக்கு விருதை வழங்கினார்.

மலையாள சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவர்  பிருத்விராஜ். இவர் சமீபத்தில் மோகன்லாலை வைத்து, ‘லூசிபர்’ என்ற பிரமாண்ட  படத்தை இயக்கினார். இந்த படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.  பிரித்விராஜிற்கு கார்கள் மீது அலாதி பிரியம் உண்டு. சமீபத்தில் இவர் மிக  விலை உயர்ந்த லம்போர்கினி காரை வாங்கினார். இவர் தனது காருக்கு பேன்சி எண்  வாங்குவது வழக்கம். இந்த காருக்கான பேன்சி எண் பெறுவதற்காக இவர் ரூ.6  லட்சம் செலவு செய்தார், இந்நிலையில், இவர் ரூ.3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஓக்  காரை வாங்கினார். இந்த காருக்கு கே.எல். 07 - சிஎஸ்7777 என்ற எண் கிடைக்க  கொச்சி ஆர்டிஓ ஆபிசில் பதிவு செய்திருந்தார். இந்த எண்ணிற்கு மேலும் பலர்  விண்ணப்பித்து இருந்தனர். 

ஒரே எண்ணிற்கு பலர் விண்ணப்பித்தால் எண் ஏலத்தில்  விடப்படுவது வழக்கம். அதிக தொகை கேட்பவர்களுக்கு எண் ஒதுக்கப்படும்.  பிருத்விராஜ் கேட்ட எண்ணிற்கு பலர் போட்டி போட்டதால் ஏலத்தொகை பல லட்சத்தை  தாண்ட வாய்ப்பு இருந்தது. இந்நிலையில், பிருத்விராஜ் திடீர் என்று ஏலத்தில்  இருந்து விலகி கொள்வதாக ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவித்துள்ளார். ஏலம்  எடுக்கும் பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க  முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு வெள்ள நிவாரணத்திற்கு  இவர் 9 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய நிகழ்விலும் பிரித்விராஜ் கேரள மக்களின் துயருக்காக குரல் கொடுத்திருப்பது வலைதளங்களில் வைரலாகிவருகிறது.