பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மீளா துயத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பி.ஆர். சோப்ராவின் மகாபாரத தொடரில் பீமனாக நடித்து உலக அளவில் புகழ் பெற்றவர் பிரவீன் குமார் சோப்தி. இதையடுத்து அவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஏராளமான படங்களில் நடித்து அசத்தினார். இந்தியில் 90 கிட்ஸின் பேவரைட் பீமனாக வலம் வந்த பிரவீன், தமிழ் ரசிகர்களிடையே ‘பீம் பாய்’ ஆக பிரபலமடைந்தார்.

சங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இவர் நடித்த பீம் பாய் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திரையுலகில் பல்வேறு நினைவுகூறத்தக்க வேடங்களில் நடித்துள்ள பிரவீன் குமார், விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.
வட்டு எறிதலில் இந்தியா சார்பில் களமிறங்கிய பிரவீன், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 4 பதக்கங்களை வென்றுள்ளார். இதுதவிர இரண்டுமுறை ஒலிம்பிக்கிலும் பங்கெடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மீளா துயத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
