தமிழகமே தற்போது போராடி வருவது, காவிரி மேலாண்மை மையம் அமைக்க வேண்டும் என்று தான். இதற்காக அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலர் ஒன்று திரண்டு கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில் காவிரி மேலாண்மை அமைக்க கூடாது என கர்நாடக விவசாயிகளும், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால், மதிய அரசோ, கர்நாடக மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பிரச்னையை பற்றி மூச்சு விடாமல் அமைதி காத்து வருகிறது.

மேலும் அரசியல் தலைவர்கள் முதல், பலர் தற்போதைக்கு மத்திய அரசு காவிரி மேலாண்மை பிரச்சனைக்கு செவி சாய்க்கப் போவதில்லை என கூறிவருகின்றனர். 

இந்நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் காவிரி நதிநீரை வைத்து இருமாநில அரசியல்வாதிகளும் அரசியல் செய்து வருவதாகவும், இந்த பிரச்சனையால் தான் இரு மாநில அரசியல் வாதிகளின் பிழைப்பு நடித்திக்கொண்டு இருப்பதாகவும், இதனால் தற்போதைக்கு காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தமிழக, கர்நாடக மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் 'காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள், இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நதிநீரை குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டு கொள்வது முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறு அல்ல, நதி நீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள் அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்ப்படும் என்று கூறியுள்ளார்.