’தமிழில் இயக்குநர் ஷங்கர் படத்தில் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அதே சமயம் மணிரத்னம், கவுதம் வாசுதேவ மேனன் என்று நான் நடிக்க ஆசைப்படும் தமிழ் இயக்குநர்கள் பட்டியல் கொஞ்சம் நீளமானது’என்று மனம் திறந்து தமிழ் சினிமா இயக்குநர்களைப் பெருமைப்படுத்துகிறார் தெலுங்கு சினிமாவின் டாப் கிளாஸ் நடிகர்களில் ஒருவரான பிரபாஸ்.

‘பாகுபலி’களின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் பிரபாஸின் ‘சாஹோ’படம் வரும் ஆகஸ்ட் 30 ம்தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரபாஸ் நிருபர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,’’பாகுபலிக்கு பிறகு எளிமையான காதல் கதையில் தான் நடிக்க திட்டமிட்டேன். இந்த கதையை கேட்டதும் ஆச்சர்யம் ஆனேன். எல்லோருக்கும் பிடித்ததால் அது படமாகவும் மாறியது.

பாகுபலிக்காக 4 ஆண்டுகள், சாஹோவுக்காக 3 ஆண்டுகள். என்று ரசிகர்களை நீண்ட காலம்  காக்க வைப்பது ஏன்? என்று கேட்கிறார்கள். ‘சாஹோ’படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட காட்சிகளுக்காக இத்தனை காலம் தேவைப்பட்டது. ரசிகர்களுக்குப் படம் பிடித்து விட்டால் காத்திருந்ததை மறந்துவிடுவார்கள் என்பதற்கு ‘பாகுபலி’யே சாட்சி.

இப்படத்துக்காக நான் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டுள்ளன. இது என் நண்பர்கள் தயாரிக்கும் படம். 12 நிமிட காட்சிக்காக 80 கோடி செலவு செய்துள்ளோம். படத்தின் பட்ஜெட் மிக பெரியது. அந்த பட்ஜெட்டில் குறிப்பிட்ட சதவீதம் தான் என் சம்பளமாக இருக்கும். அது என்ன தொகை என்பதை சொல்ல விரும்பவில்லை.

கூடிய சீக்கிரம் நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். தமிழில் இயக்குநர் ஷங்கர் படத்தில் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அதே சமயம் மணிரத்னம், கவுதம் வாசுதேவ மேனன் என்று நான் நடிக்க ஆசைப்படும் தமிழ் இயக்குநர்கள் பட்டியல் கொஞ்சம் நீளமானது என்ற பிரபாஸிடம் திருமணம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டப்போது,’மிக விரைவில். அது காதல் திருமணமாகவே இருக்கும்’என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு கேப் தராமல் எஸ்கேப் ஆனார். பரவாயில்ல பாஸ்...நாங்க மைக்க அனுஷ்கா கிட்ட நீட்டிக்கிறோம்.