தன்னை மாஃபியா கும்பல்களிடமிருந்து காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு தொடர்ந்து போன் மூலம் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் ஒருவர் மீது மலையாள நடிகை பார்வதி புகார் கொடுத்துள்ளார். அவர் மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தமிழில் இயக்குநர் சசியின் ‘பூ’படத்தின் மூலம் அறிமுகமாகி கமலின் உத்தம வில்லன் தனுசுடன் மரியான்,சென்னையில் ஒருநாள் உட்பட பல படங்களிலும் மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார் பார்வதி. கேரளாவில் மி டூ இயக்கம் செயல்படத்துவங்கியபோது மிகவும் துணிச்சலாக செயல்பட்டதால் பல மிரட்டல்களுக்கும் ஆளானதோடு பட வாய்ப்புகளையும் இழந்து தவிக்கிறார்.

இந்நிலையில் முகநூல் மூலம் பார்வதியின் சகோதரர் மற்றும் அவரது தந்தையைத் தொடர்புகொள்ளத் துவங்கிய கிஷோர் என்ற வழக்கறிஞர் பார்வதி குறித்து பல தவறான தகவல்களைக் குடும்பத்தினருக்குப் பரப்பத் தொடங்கினார். அமெரிக்காவில் இருந்த பார்வதியை கொச்சியில் மாஃபியா கும்பலின் பிடியில் இருப்பதாகவும் அவரைக் காப்பாற்றுவதற்கான தான் இத்தகவலைக் கூறுவதாகவும் கூறி குடும்பத்தினரை தொடர்ந்து டார்ச்சர் செய்தார்.சில சமயங்களில் பார்வதியின் இல்லத்துக்கு நேரிலேயே வரத் துவங்கினார். அதையொட்டி பார்வதி அந்த நபர் மீது போலீஸில் புகார் கொடுக்கவே அவர் விசாரணையின் பிடியில் உள்ளார்.