கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் மாரடைப்பால் மரணமடைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் கடைசி நிமிட வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சினிமாவில் ஆபிஸ் பாயாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தயாரிப்பு நிர்வாகியாக உயர்ந்து கூடவே குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்த அவர்  இயக்குநர் பாலாவின் தயாரிப்பு நிர்வாகியாக உயர்ந்ததோடு அவரது ‘நான் கடவுள்’படத்தில் மிக முக்கியமானதொரு கதாபாத்திரத்திலும் நடித்தார்.

நேற்றுமுன் தினம் குமுளியில் நடந்துகொண்டிருந்த ‘பேய் மாமா’படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்புக் குழுவினரால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். இந்நிலையில் அவர் ‘பேய் மாமா’படத்தில் கடைசியாக நடித்த காட்சி ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.