கள்ளக் காதல் விவகாரத்தில் சிக்கி, பின்னர் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு ஓடியதாக கதை கட்டிய நடிகர், நேற்று தன்னை சிலர் கடத்தியதாக வதந்தி பரப்பி சில மணி நேரங்களிலேயே பத்திரமாக வீடு திரும்பியுள்ளார்.

சென்னை வளசரவாக்கம், பாலாஜி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பாண்டியன். இவரது மகன் சரவணகுமார் என்கிற அபி சரவணன். ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ராஜேந்திர பாண்டியன், தனது மகனை சிலர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். 

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத் தலைமையில் சென்ற போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறிது நேரத்திலேயே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சரவணகுமார் காரில் வந்து இறங்கினார். இதையடுத்து சரவணகுமாரிடம் போலீசார் விசாரணை செய்தபோது, ‘தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நண்பர்களுடன் சென்றதாகவும்’ கூறினார். 

இதுதொடர்பாக, போலீசார் கூறுகையில், சரவணகுமார் ‘பட்டதாரி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும்போது அதே படத்தில் கதாநாயகியாக நடித்த கேரளாவைச் சேர்ந்த அதிதி மேனன் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டதாகவும் அதிதி மேனன் தன்னை ஏமாற்றி விட்டதாக சரவணகுமார் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த வழக்கில், அவரது நண்பர்களின் பெயர்களையும் சரவணகுமார் சேர்த்து விட்டதாகவும் தங்களது பெயர்களை எதற்கு சேர்த்து கொடுத்தாய் என்று கேட்பதற்காக வந்தபோது பக்கத்தில் சென்று பேசலாம் என காரில் ஏறி சென்றுள்ளார்.  போகும்போது பெற்றோரிடம் கூறாமலும் செல்போனை எடுக்காமலும் சென்றதால் சரவணகுமாரை கடத்தி விட்டதாக அவரது தந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருப்பது தெரியவந்தது.  தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், கடத்தலை சரவணக்குமார் மறைக்கிறாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் திரையுலக வட்டாரங்களில் விசாரித்தபோது அபி தனக்கும் தனது காதலி அதிதி மேனனுக்கும் தொடர்ந்து படங்கள் கிடைப்பதற்காக இப்படிப்பட்ட சர்ச்சைகளை இடைவிடாமல் பரப்பி வருவதாகவும் தனது காதலியிடம் உன்னை அடுத்த நயன் தாரா ஆக்கிக்காட்டுகிறேன் என்று கன்னத்தில் அடித்து சத்தியம் செய்திருப்பதாகவும் பகீர் செய்தியை பகிர்கிறார்கள்.