சமீபத்தில் வெளிவந்த 'பொதுநலன் கருதி' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு, இந்த படத்தின் இயக்குனருக்கும் நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.

இந்நிலையில்,  இந்த படத்தின் புரமோஷனில், இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள நடிகர் கருணாகரன் கலந்து கொள்ளாதது குறித்து இயக்குனர் சீயோன் தனது அதிருப்தியை அனைவர் மத்தியிலும் வெளிப்படுத்தினார். இதற்கு கருணாகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதில் கூறியதால் இந்த பிரச்சனை அத்துடன் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த பிரச்சனை சூடு பிடித்துள்ளது, இயக்குனர் சீயோன் மற்றும் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோருக்கு நடிகர் கருணாகரன் கொலை மிரட்டல் விடுத்துள்ளது போல் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் சீயோன், கூறியபோது, ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்னைகளை சந்தித்தோம். இப்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டுவது போல் கருணாகரனும் மிரட்டுகிறார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளோம். சினிமா நலன் கருதி கருணாகரனுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.'

அறிமுக இயக்குனரை தட்டி கொடுத்து ஆதரவாக நாலு வார்த்தை சொல்லாதது மட்டுமின்றி என் தயாரிப்பாளருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் இதற்காக கருணாகரன் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சீயோன் கூறியுள்ளார்.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்து நல்ல பெயர் பெற்று கொடுத்தவரையே இப்படி கருணாகரன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது