நடிகர் சங்கத் தேர்தல் நடக்க ஜஸ்ட் இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில்,’நியாயமாகப்பார்த்தால்,  சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை இந்தத் தேர்தல் நடத்தப்படுவதென்பது தேவையில்லாத செயல்’ என்று மிகுந்த விரக்தி, வேதனையுடன் கூறியிருக்கிறார்.

சென்னையிலுள்ள சினிமா நடிகர்களை விட சேலம், கோவை, மதுரையிலுள்ள நாடக நடிகர்களின் வாக்கு எண்ணிக்கையே அதிகம் என்பதால் விஷால் மற்றும் பாக்யராஜ் அணியினர் வெளியூர் ஓட்டு வேட்டைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று சேலத்தில் ஓட்டு வேட்டையாடிய விஷால் அணியின் பொருளாலர் வேட்பாளர் கார்த்தி பிரச்சாரத்தின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,“நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்வதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். அதையெல்லாம் தாண்டி ஒரு விஷயத்தைச் செய்து முடிக்கும்போது, இங்கு கிடைக்கும் அன்புதான் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. ‘நீங்க மாசம் ரெண்டாயிரம் ரூபாய் அனுப்புறீங்க தம்பி. அதுலதான் மருந்து வாங்கிக்கிறேன்’, ‘நீங்க அனுப்புற காசை, சீட்டு போட்டுச் சேர்த்து வெச்சு என் பேத்திக்குச் சீர் செஞ்சுட்டேன்’ என வயதான உறுப்பினர்கள் சொல்றாங்க. அப்படி நாங்க அனுப்புற பணம், அவங்க வாழ்க்கையில் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதுவும் தொடர்ந்து கொடுக்கிறது என்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். இது எப்போதுமே இருக்க வேண்டும் என்றால், அதற்குப் பயங்கர திட்டமிடல் தேவைப்படுகிறது.

முதலில் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். அந்தக் கட்டடத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான், இதுவரைக்கும் நாங்கள் ஆரம்பித்த எல்லா நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்ய முடியும். ஒருமுறை ஆரம்பித்து, அப்படியே விட்டுவிட்டுப் போகும் விஷயமாக இது இருக்கக் கூடாது. அடுத்தடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து வரவேண்டுமென்றால், அதற்குப் பெரிய திட்டமிடல் தேவைப்படுகிறது. சங்கத்தின் சட்டத்திட்டங்களைச் சரிசெய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டுமென நாங்கள் ஆசைப்படுகிறோம். இது பெரிய உழைப்பு. அந்த உழைப்பைப் போடுவதற்கான நம்பிக்கையை நடிகர் சங்க உறுப்பினர்கள் தர வேண்டும்.

இந்த நடிகர் சங்கத் தேர்தல் என்பது எவ்வளவு பெரிய வீண் வேலை என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் ஓட்டு கேட்டு ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறோம். கட்டடத்துக்கு வேலை செய்யாமல், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். இது அவசியமே இல்லாத ஒரு விஷயம்.ஒரு சங்கத்துக்குள் சுலபமாகப் பேசிக்கொண்டு, அந்தச் சங்கத்தின் நலனுக்காகப் போராடுவோமா? நான் பெரிய ஆள், நீ பெரிய ஆள்... நான் ஜெயிச்சிக் காட்டுறேன் எனப் போராடுவோமா? இந்தப்போராட்டத்தில் எவ்வளவு பேருடைய உழைப்பு வீணாகப்போகிறது என்று பாருங்கள். நியாயமாகப் பார்த்தால் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருக்கவே கூடாது. கட்டிடம் கட்டி முடித்தபிறகே தேர்தல் நடத்தப்பட்டிருக்கவேண்டும்’என்று குமுரித் தீர்க்கிறார் கார்த்தி.