கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்கள் ஹிட்டடித்தன. வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இருந்தது. இதை அடுத்து கார்த்தி, புதுமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். முந்தைய இரு படங்களில் போலீஸ் அதிகாரி, விவசாயியாக நடித்த கார்த்தி, தனது 17ஆவது படத்தில் மீண்டும் சாக்லேட் பாயாக மாறுகிறார். 

முழுக்க முழுக்க ரொமாண்டிக் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தேவ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 50 கோடி ரூபாய் பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். மேலும் முன்னணி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், நவரச நாயகன் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். 

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முன்னணி இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். சென்னை, ஐதராபாத், இமயமலை, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படத்தை கிறிஸ்துமசை குறிவைத்து டிசம்பர் 21ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இயக்குனர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.   படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என்பது தான் அந்த அறிவிப்பு.இதை நடிகர் கார்த்தியே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், தயாராகுங்கள் நண்பர்களே, ரகுல் பிரீத்துடன் தாம் நடித்துள்ள அடுத்த படத்தின் தலைப்பு மற்றும்  ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் அந்தப் பதிவை, இயக்குனர் ரஜத், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் குமார், தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் ஆகியவற்றுக்கு கார்த்தி டாக் செய்துள்ளார்.