’புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யும் வீடியோ உண்மையானதல்ல. ஒரு வாக்காளனாக எனது கடமை வாக்குப் போடுவது மட்டுமே. யாருக்கும் வாக்குக் கேட்பது அல்ல’ என்கிறார் நடிகர் கார்த்தி சிவக்குமார்.

புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏசி சண்முகம், அஇஅதிமுக கூட்டணி சார்பில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் , வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “அவர்கிட்ட போய் நின்றால், நமக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு, நாம் கேட்பதற்கும் மீறி செய்யக்கூடிய ஒருவர். மருத்துவ உதவியாகட்டும், பென்ஷன் தொகையாகட்டும் அல்லது கட்டிடம் கட்டும்போது அதற்குத் தேவையான அறிவுரைகளாகட்டும்... எங்களுக்கு நண்பராக, நலம் விரும்பியாக எப்போதும் கூடவே இருக்குறவர் சண்முகம் சார்.

எம்ஜிஆரின் வழியில் வந்ததாலோ என்னவோ, பொதுத்தொண்டு என்பது அவருடைய இயல்பிலேயே உள்ளது. இவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தை நிறுவியுள்ளார். ஒரு சாதாரண ஆளாக ஆரம்பித்து, இன்னிக்குப் பெரிய சாம்ராஜ்யமாக மாத்தியிருக்கார். அவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துருக்கார், உதவி பண்ணிருக்கார்.

முக்கியமாக, சினிமாவில் இருக்கும் பல பேருக்கு, பல தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் பண்ணிக் கொடுக்கிறார். அவர் பொதுப்பணி தொடரணும். அவர் எந்தக் காரியம் எடுத்துச் செய்தாலும், அது வெற்றியடைய வேண்டுமென நான் வாழ்த்துகிறேன், வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி.

இந்த வீடியோவை, ஏசி சண்முகத்துக்கு ஆதரவாகப் பயன்படுத்து வருகின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். இதனால், ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக கார்த்தி ஓட்டு கேட்பது போன்ற பிம்பம் உருவானது. எனவே, இதுகுறித்து விசாரித்து கார்த்திக்குக்கு நிறைய போன் வந்தது.

 

இந்நிலையில், அந்த வீடியோ குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் கார்த்தி.“தேர்தலில் நான் பிரச்சாரம் செய்வது போன்ற வீடியோ குறித்து எனக்கு நிறைய போன் வந்தது. அது முற்றிலும் தவறான தகவல். தேர்தலில் வாக்கு அளிப்பது மட்டுமே என்னுடைய பங்கு” எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி. இதன்மூலம் ஏ.சி.சண்முகம் குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் நடிகர் கார்த்தி பேசிய வீடியோவை புதிய நீதிக்கட்சியினர் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிகிறது.