’அரசியலை ஒரு தொழிலாய் செய்பவர்களுக்குத் தீனி போடாதீர்கள்’என்று வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு மக்கள் நீதிமய்யம் நிறுவனர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ அம்பேத்கரை இதுபோன்ற சமயங்களில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு அந்த வன்முறையாளர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டு வருகின்றனர்.

காவல் நிலையம் எதிரிலேயே சிலை உடைக்கப்பட்டது. வன்முறை ஏற்பட்டதும் போலீஸார் தடுக்க முடியாத நிலையில் இருந்தனர். இந்தச் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். அதே நேரம் சிலை உடைக்கப்பட்ட சில மணி நேரத்தில் அதே இடத்தில் புதிய சிலையை காவல்துறை அமைத்தது. அதை பலரும் பாராட்டுகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,...வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் தான். ஒடுக்கப்பட்ட சமூகமும் முன்னேற வேண்டிய சமூகமும் மோதிக்கொள்வது அரசியலைத் தொழிலாய் செய்பவர்களுக்கு தீனியே தவிர, தமிழன முன்னேற்றத்திற்கு வழியல்ல. சமூக விரோதிகள் மீது அரசின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும். நல்லவர்கள் சமூக அமைதி ஏற்பட முயற்சிக்க வேண்டும்...என்று பதிவிட்டுள்ளார்.