’கோமாளி’குழுவினரிடம் தனது கதையைப் பறிகொடுத்த உதவி இயக்குநருக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் ரூ.10 லடசம் நஷ்ட ஈடு வாங்கிக்கொடுத்திருக்கும் தகவலால் கதை திருட்டு குறித்த பயம் முன்னணி இயக்குநர்களுக்கு வந்திருக்கிறது என்று தமிழ் நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பார்த்திபனின் உதவியாளரான கிருஷ்ணமூர்த்தி திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.அதனால் அது குறித்த விசாரணை நடைபெற்றது.முடிவில், கிருஷ்ணமூர்த்திக்கு படத்தில் நன்றி தெரிவித்து எழுத்து போடுவது என்று முடிவு செய்யப்பட்டது.அந்த நன்றி அறிவிப்பு ஒரு சில வினாடிகள் மட்டுமே வந்து போகிறது. முதல் வரியை படித்து முடிப்பதற்குள்ளாக அந்த அறிவிப்பு மறைந்து போகிறது. தயாரிப்பாளர் பெயரில் ஒரு அறிவிப்பும், இயக்குநர் பெயரில் மற்றொரு அறிவிப்பும் காட்டப்படுகிறது. ஆனால் இந்த அற்விப்புகள் மட்டும் போதாது என்று அந்த உதவி இயக்குநருக்கு இயக்குநர் பாக்யராஜ் ரு.10 லட்சம் நஷ்ட ஈடும் வாங்கித் தந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஒருவன் கோமாவிற்கு சென்று நினைவு திரும்புகிறான் என்பது எங்களின் கோமாளி படத்தின் கதைக்கரு. இந்த கதைக்கருவும் பா.கிருஷ்ணமூர்த்தியின் 25+25=25 என்ற டைட்டிலிட்ட கதையின் கதைக்கருவும் ஒன்றாக இருக்கிறது என்ற விஷயம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்து தகவல் பெற்றோம். அவர் எங்கள் படத்தின் கதாசிரியருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட கதையை சங்கத்தில் பதிவு செய்து உள்ள காரணத்தால் எழுத்தாளர் பா.கிருஷ்ணமூர்த்தியை கௌரவித்து பாராட்டுகிறோம். மேலும் சங்கம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்கிறோம். சுமூகமான முறையில் தீர்வு கண்ட சங்கத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றி.

இவ்வாறு தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் தெரிவித்துள்ளார்.இந்த நன்றியோடு மட்டும் இல்லாமல் கிருஷ்ணமூர்த்திக்கு பத்து இலட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.இத்தகவலை எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அச்சங்கம், தமது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், நமது சங்கத் தலைவர் பாக்யராஜின் சீரிய முயற்சியில் கோமாளி கதை திருட்டு சிக்கல் முடிவுக்கு வந்தது.இதன்படி கிருஷ்ணமூர்த்திக்கு பத்து இலட்சம் ரூபாய் பணமும் படத்தில் நன்றி அறிவிப்பும் வெளியிட தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.